search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயேசு கிறிஸ்து"

    அநீதி மற்றும் சமத்துவமின்மை நீங்கிய உலகம் உருவாக இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முக்கியத்துவமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். #PMremembers #sacrificeofJesus #GoodFriday
    புதுடெல்லி:

    புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.

    கல்வாரி மலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    இந்தியாவில் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளியன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.


    இந்நிலையில், இந்நாளில் பிரதமர் நரேந்திர மோடி, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை நாம் நினைவுகூர்கிறோம், அவரது வாழ்க்கை, உயர்வான தத்துவங்கள் மற்றும் அளப்பரிய தீரம் போன்றவை பலருக்கு உத்வேகம் அளிக்கும் பக்கபலமாக அமைந்துள்ளது.

    அநீதி மற்றும் சமத்துவமின்மை நீங்கிய உலகம் உருவாக இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முக்கியத்துவமான காரணமாகும்’ என குறிப்பிட்டுள்ளார். #PMremembers #sacrificeofJesus #GoodFriday
    மக்களின் பாவங்கள் நீங்க தன்னுடலை சிலுவையில் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான இன்று அவர் பிறந்த பெத்லகேம் நகரில் கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. #Bethlehem #ChristmasinBethlehem
    பெத்லகேம்:

    இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த பெத்லகேம் நகரம் தற்போது பாலஸ்தீனம் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.



    இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தின் அருகாமையில் மிகப்பழமையான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. ‘நேட்டிவிட்டி சர்ச்’ என்றழைக்கப்படும் இந்த தேவாலயத்தை தரிசிக்கவும், இங்கு பிரார்த்தனை செய்யவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கு நடைபெறும் பிரார்த்தனை கூட்டம் மிக சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது.

    அவ்வகையில், இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான  இன்று இஸ்ரேல் நாட்டில் உள்ள மக்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அந்த தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு நேர கிறிஸ்துமஸ் தின சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, துதி பாடல்களைப் பாடி, பிரார்த்தனை செய்தனர்.

    இந்த சிறப்பு பிரார்த்தனையில் பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அப்பாஸ், பிரதமர் ரமி ஹம்டல்லா மற்றும் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக நேற்று, சூரியன் மறைந்த பின்னர் இஸ்ரேல் ராணுவத்தின் சோதனைச்சாவடி எல்லையை கடந்து அந்நாட்டின் ரோமானிய கத்தோலிக்க தலைமை பேராயர் பியர்பட்டிஸ்ட்டா பிஸாபல்லா  ‘நேட்டிவிட்டி சர்ச்’ அமைந்துள்ள பாலஸ்தீனம் பகுதிக்கு வந்தார். அவரை ஆடல், பாடல் மற்றும் இயேசுவைப் பற்றிய துதிப்பாடல்களுடன் மக்கள் அன்புடன் வரவேற்றனர்.



    அங்கு மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ராட்சத கிறிஸ்துமஸ் மரத்தின் முன்னால் சிலர் குழுவாக நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரேவேளையில் குவிந்ததால் ஓட்டல்களில் அறைகள் கிடைக்காமல் சிலர் சாலையோரங்களில் தங்கி ஓய்வெடுத்தனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேம் நகரம் முழுவதும் வண்ணவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களில் புத்தாடை உடுத்திய சிறுவர்-சிறுமியர் வாணவேடிக்கைகளை கண்டு களித்தனர்.

    உறவினர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கேக் மற்றும் இனிப்பு வகைகளை பரிமாறி உற்சாகமாக காணப்பட்டனர்.

    இதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் இன்று கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ சகோதர-சகோதரிகளுக்கு 'மாலை மலர் டாட்காம்’ சார்பில்  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! #Bethlehem  #ChristmasinBethlehem  
    இயேசு கிறிஸ்து மண்ணகத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து மரித்தது எல்லாமே மானுட மீட்புக்குக்காகத்தான்.
    ‘மீட்பு’ என்பதற்கு உண்மையான பொருளே ‘முழுமையான விடுதலை’ என்பது தானே?

    ‘உறவுக்குக் கை கொடுத்தார், மக்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தார், அன்புக்கு ஒளி கொடுத்தார், உலக அமைதிக்கு வழி வகுத்தார், மீட்புக்கு உயிர் கொடுத்தார், இறை ஆட்சிக்கு விதை விதைத்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்’ என்கிறது யோவான் 3-வது அதிகாரம் 14-17 வசனங்கள்.

    இறைத்தூதராக மண்ணில் பிறப்பெடுத்த இயேசு அரச குலத்திலேயே அவதரித்திருக்க முடியும். ஆனால், ஆடம்பர வாழ்க்கைச் சிந்தனையில் இருந்து மக்களை மீட்பதற்காகத்தான், ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எளிய மனிதர்களின் தோழனாகவும் வாழ்ந்து காட்டினார்.

    அறியாமை இருளிலிருந்து மீண்டு, மனிதர்கள் ஞான ஒளி பெறவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவே, குறுக்குப் புத்தியுடன் கேள்வி கேட்ட சதுசேயர்களுக்கும், பரிசேயர்களுக்கும் தனது 12-வது வயதிலேயே ஆலயத்தில் வைத்து பதிலடிகொடுத்தார்.

    பெண் விடுதலையை மீட்டெடுக்கவே, ஓர் விபசாரப் பெண்ணை அவர் முன் நிறுத்தி, தண்டனை வழங்கக் கோரிய பரிசேயர்களுக்கு, ‘உங்களில் பாவம் செய்யாதவன், இவள் மீது கல் எறியட்டும்’ என்று கண்டனம் தெரிவித்தார்.



    தான் யூதகுலம் என்ற உயர்குடியில் பிறந்தாலும் அடிமைத் தளையிலிருந்து, மனிதர்களை மீட்டெடுக்கவே ஒடுக்கப்பட்ட புறவினத்தாரோடும், ஒதுக்கி வைக்கப்பட்டத் தொழுநோயாளிகளோடும் நெருங்கிப் பழகி இயைந்த வாழ்க்கை நடத்தினார்.

    இறைவன் உறையும் ஆலயத்தை வியாபாரிகளிடமிருந்து மீட்கவே அன்று கோவிலைச் சந்தையாக்கிய அந்த கொள்ளையர்களுக்கு சாட்டையடி கொடுத்து சரித்திரம் படைத்தார் இயேசு கிறிஸ்து.

    பகைமை, வெறுப்பு வேற்றுமைகளில் இருந்தெல்லாம் மனித குலத்தை மீட்டு, அவர்களிடையே அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை தழைக்கச் செய்யத்தானே அன்று மலைப்பிரசங்கம் முழங்கினார்.

    மலைப்பிரசங்கம் வழியாகப் பொதுவுடமைச் சிந்தாந்தத்தை முழங்கிய முதல் புரட்சியாளன் இயேசு கிறிஸ்து தான் என்பதை யாரும் மறுக்க முடியுமா?

    பசியிலிருந்தும், பட்டினியிலிருந்தும் மனிதர்களை மீட்கவே அன்றொரு நாள் அப்பத்தையும், மீனையும் ஆசீர்வதித்து அதை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளிக்கச் சொன்னார்.

    அவரது பிறப்பு இயற்கை அமைத்த ஒரு குகையில். இறப்பு இயற்கையினால் கிடைத்த சிலுவை மரத்தில். ஞானஸ்நானம் யோர்தான் நதியில். தனது சீடர்களைத் தேர்ந்தெடுத்தது கடற்கரையில் தான்.

    கெத்சேமெனித் தோட்டத்தில் தான் ஜெபித்தார். கெடுதலான அலகையை மலையில் தான் சபித்தார். வானத்துப் பறவைகளைப் பார்க்கச் சொன்னார். வளர்ந்து நிற்கும் நெற்கதிரை நோக்கச் சொன்னார்.

    இயற்கைப் பேரழிவிலிருந்து உலகை மீட்கவே, இயற்கையை நேசித்து அவற்றோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார் இயேசு.

    அநீதிகள், அக்கிரமங்களின் பிடியிலிருந்து நீதியையும், நேர்மையையும், நியாயத்தையும் மீட்கத்தானே, அன்று அதிகாரத்தின் உச்சத்திலிருந்த பிலாத்து அரசன் கன்னத்தில் அறைந்தபோது, நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யவில்லையெனில் ஏன் என்னை அறைந்தாய் என்று போர்க்குரல் எழுப்பினார்?.

    கயவர்களின் நயவஞ்சகங்களைச் சந்திக்கிறபோது, பொறுமை உணர்வை மீட்டெடுக்கவே கொடூரமான முள் முடியையும், அவமானகரமான சிலுவைச்சாவையும் ஏற்றுக்கொண்டார், நம்மைப் பாவங்களிலிருந்து மீட்க.

    இதைத்தான் எசாயா 53:4-6 வசனங்களில் ‘அவர் நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    குறைந்த வயதிலேயே மரணத்தை எய்தினாலும், குறிக்கோள் மாறாத ஆன்மிக நாயகனாகவும், உயர்ந்த சமூகப்போராளியாகவும் குவலயத்தில் வாழ்ந்து காட்டி விட்டுப் போனவர் இயேசு கிறிஸ்து.

    எனவே அவர் காட்டிய மீட்பின் வழி நடப்போம். அனைத்து ஆனந்தங்களையும் பெறுவோம்.

    கவிஞர் எல்.பிரைட், தேவகோட்டை.

    ×